இந்த தேவாலயம் அழகானது ஆனால் அதில் தொங்கும் கூண்டுகள் ஒரு கொடூரமான கதையை நமக்குச் சொல்கிறது.
தேவாலயம் என்றாலே அமைதியான இடம் என்று தானே நமக்குத் தெரியும். ஆனால் 1536 ல் ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் உள்ள செயின்ட் லேம்பெர்ட் தேவாலயம் மூன்று கொடூரமான கொலைகள் நடந்த களமாக உள்ளது.
1534 ல் மறு ஞானஸ்னானக் கோட்பாட்டாளர்களின் கும்பல் கத்தோலிக்க தேவாலயத்தை எதிர்த்து முன்ஸ்டர் நகரில் தங்களது ஆட்சியை நிறுவியது. அனைத்து சொத்துக்களும் பொதுவானது, உணவு மற்றும் செல்வம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் போன்ற அவர்களின் வாக்குறுதிகள் பலரை ஈர்த்தது.
ஆனால் எதுவும் சரிவர நடக்கவில்லை.
மறு ஞானஸ்னானக் கோட்பாட்டாளர்களின் தலைவனான ஜான் மேத்திஸ், அந்நகரின் முன்னாள் பாதிரியரான ஜான் லெய்டன் என்பவரால் கொலை செய்யப்பட்டான். ஆட்சியைக் கைப்பற்றிய லெய்டன் செல்வம் மற்றும் 16 மனைவிகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்தான். அதே சமயம் அந்நகர மக்கள் பசி மற்றும் பட்டினியால் இறந்து கொண்டிருந்தனர்.
இரண்டு வருடம் தொடர்ந்த இந்த ஆட்சியை கத்தோலிக்க தேவாலயம் திரும்பக் கைப்பற்றியது. ஜான் லெய்டன் மற்றும் அவனது சக்தி வாய்ந்த கூட்டாளிகள் இருவரையும் சிறையில் அடைத்து மரண தண்டனைக்கு உத்தரவிட்டனர்.
மூவரின் மரணமும் உடனே நிறைவேற்றப்படவில்லை, ஒவ்வொருவரும் மணிக்கணக்கில் பொது இடத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். நெருப்பினால் சிவந்த இடுக்கியைக் கொண்டு வெட்டுக்களும் தீக்காயங்களும் அவர்களது உடலில் ஏற்படுத்தப்பட்டது. மூவரின் நாக்கும் அகற்றப்பட்டது. அவர்களது இதயமானது சூடான கத்தியைக் கொண்டு குத்திக் கிழிக்கப்பட்டது.
இந்த ஓவியம் அந்த கொடூரமான நிகழ்வுகளை நமக்குக் காட்டுகிறது. பின்புறம் தேவாலயத்தில் தொங்கும் குண்டுகளையும் காணலாம்.
தேவாலயத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இதே நிலை தான் என்று எச்சரிக்கும் விதமாக மூவரின் சடலமும் கூண்டுக்குள் வைக்கப்பட்டு அனைவரும் பார்க்கும் வண்ணம் தொங்கவிடப்பட்டது. 50 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் எலும்புகள் அகற்றப்பட்டது. ஆனால் கூண்டுகள் இன்றும் தேவாலயத்தின் மேல் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது.
No comments:
Post a Comment